தருமபுரி மாவட்டத்தில் புதியதாக 1 நகராட்சி மற்றும் 1 பேரூராட்சி உதயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஜனவரி, 2025

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக 1 நகராட்சி மற்றும் 1 பேரூராட்சி உதயம்.


தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.


மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன.


இப்பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியம் ஆகிறது. இதன் மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.


மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டுக்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


இவற்றோடு, வேகமாக நகரமயமாகிவரும், வளச்சியடைந்து வரும் பெரும்பாலான சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி மற்றும் இடப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிப் பணிகள், சேவைகளுக்கான விரைவான, திறம்பட்ட செயலாக்கத்துக்கான பொறியாளர்கள் உள்ளிட்ட தேவையான பணியமைப்பு குறைந்த அளவிலேயே உள்ளது போன்றவற்றை களையவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.


இதன்மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும். இம்மேம்பாட்டினால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலகங்கள் ஏற்படவும், வேலைவாய்ப்பு உருவாகவும், வருவாய் பெருகவும், அனைத்து தரப்பு வளர்ச்சிக்கும் ஏதுவாகும்.


அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



அதன்படி தருமபுரி மாவட்டத்தில் புதிய நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் பல ஊராட்சிகள் நகராட்சியுடனும், பேரூராட்சிகளுடனும் இணைக்கப்படுகிறது,   


தருமபுரி நகராட்சி:

தருமபுரி நகராட்‌.சியுடன்‌ இலக்கியம்பட்டி. சோகத்தூர்‌. ஏ.ஜெட்டிஅள்ளி மற்றும்‌ தடங்கம்‌ ஊராட்சிகளில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்‌ பயணாளிகளின்‌ எண்ணிக்கை 1.1% அளவிலேயே உள்ளன. மேலும்‌, இவ்ஊராட்சிகள்‌ நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புர பண்புகளையும்‌. கொண்டுள்ளன. எனவே, மேற்படி 4 ஊராட்சிகளை தருமபுரி நகராட்சியுடன்‌ இணைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.



அரூர் நகராட்சி:

அரூர்‌ சிறப்பு நிலைப்‌பேரூராட்சியுடன்‌, அதன்‌ ஆருகில்‌ உள்ள மோப்பிரிப்பட்டி மற்றும்‌ தொட்டம்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைத்து நகராட்சி மன்றமாகத்‌ தரம்‌ உயர்த்த சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத்தால்‌ (தீர்மானம்‌ எண்‌.380, நாள்‌.08.07.2024) தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தருமபுரி மாவட்டம்‌, அரூர்‌ சிறப்பு நிலை பேரூராட்சி, அதன்‌ அருகிலுள்ள ஊராட்சிகளுடன்‌ இணைத்து நகராட்சியாக தரம்‌ உயர்த்தப்படும்‌ என அறிவித்துள்ளார்‌. தருமபுரி மாவட்டம்‌, அரூர்‌ சிறப்புநிலை பேரூராட்சியானது 18 வார்டுகளூடன்‌ 14.750 சதுர கி.மீ பரப்பளவில்‌ அமைந்துள்ளது.


இப்பேரூராட்சியின்‌ மூன்றாண்டுகளின்‌ சராசரி வருவாய்‌ ரூ.735,.25 இலட்சம்‌ ஆகும்‌. மேலும்‌, அரூர்‌ சிறப்பு நிலை பேரூராட்சியுடன்‌ அதன்‌ அருகில்‌ உள்ள மோபிரிபட்டி மற்றும்‌ தொட்டம்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகள்‌ இணைக்கப்படும்‌ நிலையில்‌, அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம்‌ உயர்த்துவதற்கான ஆண்டு வருவாய்‌ மற்றும்‌ மூன்றாண்டு சராசரி வருவாய்‌ ரூ.8 கோடிக்கு மேல்‌ உள்ளதால்‌ அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம்‌ உயர்த்தப்படுகிறது.


பேரூராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள்:

பாலக்கோடு பேரூராட்சியுடன் அருகிலுள்ள ஜர்தலாவ் ஊராட்சியும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன் வெங்கடேசமுத்திரம் ஊராட்சியும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியுடன் மாதேஹள்ளி ஊராட்சியும், பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதனஹள்ளி ஊராட்சியும் இணைக்கப்படுகிறது.


கூத்தப்பாடி பேரூராட்சி.

பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி ஊராட்சி அருகிலுள்ள ஊராட்சிகளுடன் இணைத்து கூத்தப்பாடி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad