கடந்த 2024 ஆம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.3,41,31,300/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்தொரு லட்சத்து முற்பத்தொராயிரத்து முந்நூறுமட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை ஒரு வருடத்தில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தலைமையில், தருமபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.இரா.பாலசுப்பரமணியன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலவக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அதில், 19,827 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 6,621 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 725 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 370 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 221 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 183 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 2422 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 409 வாகனங்களுக்கும், காப்புச்சான்று / புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 1,119 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபளிப்பான்கள் இல்லாமல் இயக்கிய 799 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 467 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், 2024 ஆம் ஆண்டு உயிரிழப்பு விபத்து 92 ஓட்டுநர் உரிமங்கள் மீது தற்காலிக தடையும், போக்குவரத்து விதிமீறயில் ஈடுபட்ட 486 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக தடையும் செய்யப்பட்டது. வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.1,07,41,500/- (ரூபாய் ஒரு கோடியே ஏழு லட்சத்து நாற்பத்தோராயிரத்து ஐந்நூற்று மட்டும்) மற்றும் இணக்க கட்டணமாக ரூ.73,87,200/- (ரூபாய் எழுபத்து மூன்று லட்சத்து எண்பத்து ஏழாயிரத்து இருநூறு மட்டும்) ஆக மொத்தம் ரூ.1,81,28,700/- (ரூபாய் ஒரு கோடி எண்பத்தொரு லட்சத்து இருபத்தொட்டாயிரத்து எழுநூறு மட்டும்) உடனடியாக வசூலிக்கப்பட்டது.
மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.1,60,02,600/- (ரூபாய் ஒரு கோடியே அறுபது லட்சத்து இரண்டாயிரத்து அறுநூறு மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2024 ஆம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.3,41,31,300/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்தொரு லட்சத்து முற்பத்தொராயிரத்து முந்நூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ- க்கு மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி (Speed Radar Gun) உதவியுடன் கடந்த 4 ஆண்டுகளில் 14,370 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.1,09,90,400-(ரூபாய் ஒரு கோடியே ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரத்து நானூறு மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக