தருமபுரி மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் இது நாள் வரை 69 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.5813 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.855.34 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. NEEDS திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழிலுக்கு ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.5.00 கோடி வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தமிழக அரசு தற்சமயம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கல்வித்தகுதி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதனை தளர்த்தி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50.00 இலட்சம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும் என்பதனை உயர்த்தி அதிகபட்ச தனிநபர் முதலீட்டு மானியம் ரூ.75.00 இலட்சம் வழங்கப்படும் எனவும் பட்டியலினம் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும் எனவும் 01.10.2021 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
புதிய சுயதொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் இது நாள் வரை 318 நபர்களுக்கு ரூ.1823 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.1252 இலட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 01.06.2022 முதல் உற்பத்தி தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.25.00 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சமாகவும், சேவை தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10.00 இலட்சத்திலிருந்து ரூ.20.00 இலட்சமாகவும் உயர்த்தி ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. திட்ட மதிப்பீடு உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10.00 இலட்சத்திற்கு கூடுதலாகவும் மற்றும் சேவைப்பிரிவின் கீழ் ரூ.5.00 இலட்சத்திற்கு கூடுதலாகவும் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு நகர்புறப் பகுதிகளில் தொழில் துவங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரையிலும், கிராமப்புறப் பகுதிகளில் தொழில் துவங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் வரையிலும் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www.kviconline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் இதுநாள் வரை 285 நபர்களுக்கு ரூ.1797 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.449 இலட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
UYEGP திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அதிகபட்ச வயது வரம்பு – பொது பிரிவினருக்கு 35 வயது, சிறப்பு பிரிவினருக்கு 45 வயதாக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ. 5.00 இலட்சமாக இருக்க வேண்டும், அரசு மானியம் 25 சதவீதம் மற்றும் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் (PMFME) 359 நபர்களுக்கு ரூ. 3108 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.1185 இலட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் (AABCS) 48 நபர்களுக்கு ரூ.788.51 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவதற்கான சிறப்பான திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். மொத்த திட்டத் தொகையில் 65% வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
கலைஞர் கைவினைத்திட்டத்தின் கீழ் (KKT) நடப்பு ஆண்டில் 33 நபர்களுக்கு ரூ.17.63 இலட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன் ஒப்பளிப்பு கடிதம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான அரசு ஆணை G.O.Ms.No.64, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை(F), நாள்: 06-12-2024 வெளியிடப்பட்டுள்ளது.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது: மரவேலைப்பாடுகள், மண்பாண்டங்கள். சுடுமண்வேலைகள். உலோக வேலைப்பாடுகள். தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள் பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள். கட்டட வேலைகள், படகு தயாரித்தல், கூடை முடைதல், கயிறு. பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல். பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப்பொருள்கள் ஆகிய அரசின் திட்டங்களை பயன்படுத்தி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கி மக்கள் பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி பெற்று, பேப்பர் பேக் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி பயனடைந்து வரும் தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், சவுளூரைச் சேர்ந்த திருமதி.சி.மீனாட்சி அவர்கள் தெரிவித்ததாவது: எனது பெயர் மீனாட்சி. எனது கணவர் பெயர் சிவக்குமார். நான் தருமபுரி மாவட்டம், சவுளூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான், D.Pharm படித்து முடித்து கம்பைநல்லூரில் உள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வந்தேன்.
இருந்தபோதிலும், குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எனது வருமானம் இல்லை. எனவே, சுயமாக தொழில்செய்து இலாபம் ஈட்டும்வகையில் உள்ள பேப்பர் பேக் (Paper Bag) தயாரிக்கும் தொழில் செய்யலாம் என ஆர்வமாக இருந்தேன். இந்நிலையில் செய்தித்தாள்களின் வாயிலாக ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி வழங்குவது தொடர்பான செய்தி வெளியானது. இச்செய்தியை அறிந்த பின் உடனடியாக தருமபுரி மாவட்ட தொழில் மையத்தை அணுகியபோது, அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி தகுந்த ஆலோசனை வழங்கி பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்குமாறு வழிகாட்டினர். இத்திட்டத்தின் கீழ் சுயமாக பேப்பர் பேக் உற்பத்தி செய்யும் தொழில் அமைக்க விண்ணப்பித்தேன்.
எனக்கு தமிழக அரசின் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கி கம்பைநல்லூர் கிளையின் உதவியுடன் ரூ.18.40 இலட்சம் கடனுதவி கிடைத்தது. இதில் அரசின் மானியமாக ரூ.6.77 இலட்சம் உடனடியாக வழங்கப்பட்டது. இதன் மூலமாக எஸ்.எம் பேப்பர் பேக் தொடங்கப்பட்டு தினமும் 7000 பேப்பர் கவர் (Paper Cover) தயாரிக்கப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் விற்பனை செய்து வருகிறேன். சுயதொழில் தொடங்கும் நோக்கத்துடன் இத்திட்டத்தில் கீழ் விண்ணப்பித்து கடந்த ஆறு மாத காலத்தில் சுய தொழில் முனைவோராக உருவாகியுள்ளேன்.
என்னுடைய நிறுவனத்தில் 4 நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். எங்கள் எஸ்.எம் பேப்பர் பேக் மூலம் சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் பிளாஸ்டிக் கவுர்களுக்கு பதிலாக பேப்பர் கவுர்களை தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. தொழில் தொடங்க போதிய அளவில் முதலீடுகள் இல்லாமல் தவித்து வந்த எனக்கு தமிழக அரசின் மூலம் நிதியுதவி கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களது கனவை நனவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ”நிறைந்தது மனம்” என்று நெஞ்சார்ந்த நன்றியினை எங்களைப் போன்ற தொழில்முனைவோர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி பெற்று, பேப்பர் பேக் தயாரித்தல் தொழில் நடத்தி பயனடைந்துவரும் திருமதி.சி.மீனாட்சி அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக