கலைஞர் கைவினை திட்டத்தின் கையேடு வெளியீடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

கலைஞர் கைவினை திட்டத்தின் கையேடு வெளியீடு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தின் கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று வெளியிட்டார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தின் கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.01.2024) வெளியிட்டார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி "கலைஞர் கைவினைத்திட்டம்" என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கான அரசு ஆணை G.O.Ms.No.64, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (F), நாள்: 06-12-2024 வெளியிடப்பட்டுள்ளது.


கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும். மரவேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், உலோக வேலைப்பாடுகள், தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை போன்ற தொழில்கள், பூட்டு தயாரித்தல், சிற்பவேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், கட்டட வேலைகள், படகு தயாரித்தல், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப்பொருள்கள் ஆகியனவாகும்.


தருமபுரி மாவட்டத்தில் இதுவரை அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் வட்டார அளவிலான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 377 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 188 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. 33 கடன் ஒப்பளிப்பு ஆணைகள் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.


மேலும் நமது மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தருமபுரி தொழில் பூங்கா (சிப்காட்) தருமபுரி வட்டத்தில் அதகப்பாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டத்தில் அதியமான் கோட்டை தடங்கம் (ம) பாலஜங்கமனஹள்ளி கிராமங்களில் 1733.03 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. இத் தொழிற் பூங்காவிற்கான சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் பூங்கா செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இது தொழில் முனைவோர்களின் தேவையை பூர்த்தி செய்து நமது மாவட்டத்தை தொழில் துறையில் மேலும் மேன்மையடையச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டமும் (NEEDS), எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமும் (UYEGP), கல்வி தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டமும் (AABCS), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமும் (PMEGP), மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டமும் (PMFME) மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேற்கண்ட அரசின் திட்டங்களை பயன்படுத்தி புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.பிரசன்னா பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், தாட்கோ பொது மேலாளர் திரு.வேல்முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad