தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் கௌரவ விரிவுரையாளர்களை வைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழக அரசு தற்போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூபாய் 25000 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் யுஜிசி விதிமுறைப்படி ரூபாய் 50000 வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ சொற்ப ஊதியமாக ரூபாய் 25000 மட்டும் வழங்கி வருகிறது. ரூபாய் 50,000 கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவையும் கடை பிடிக்காமல் அலட்சியம் செய்கிறது. இதனையடுத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து கண்டனத்தை தெரிவிக்கும் பொருட்டு பல்வேறு அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், வாயில் முழக்க போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு வகையான ஆர்ப்பாட்டங்களை தமிழக அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து (24.01.2025) முதல் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் சுமார் 60 கௌரவ விரிவுரையாளர்கள் முதல் கட்டமாக மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் கல்லூரி துவங்குவதற்கு முன்பும் கல்லூரி முடிந்த பின்பும் வாயில் முழக்கப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கூடிய விரைவில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 50,000 வழங்காத பட்சத்தில் இந்த அறப்போராட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுப்போம் என்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக