இலக்கியம்பட்டி ஊராட்சியை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 400க்கும் மேற்பட்ட பெண்கள் மனித சங்கிலி போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

இலக்கியம்பட்டி ஊராட்சியை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 400க்கும் மேற்பட்ட பெண்கள் மனித சங்கிலி போராட்டம்.


தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க  எதிர்ப்பு தெரிவித்து இன்று 400க்கும்  மேற்பட்ட பெண்கள் இலக்கியம்பட்டியில் நேதாஜி பைபாஸ் சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து பாப்பிரெட்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கூறுகையில் இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியோடு இணைப்பது குறித்து கடந்த ஆட்சியிலேயே நாங்கள் கலந்து ஆலோசித்த போது வேண்டாம் என்று கூறியதால் எடப்பாடியார் அவர்கள் முடிவை கைவிட்டு விட்டார். அதேபோல் இந்த ஊராட்சி தர்மபுரி நகராட்சியோடு இணைக்க இந்த அரசு திட்டமிட்டபோது அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 


அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் இலக்கியம்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளை தர்மபுரி நகராட்சியோடு  இணைத்துள்ளனர். சட்டமன்ற கூட்டத்தொடரில் நகராட்சி துறை அமைச்சர் எந்த ஊராட்சியும் அங்கு வசிக்கும் மக்களின் எதிர்ப்பை மீறி நகராட்சியோடு இணைக்க மாட்டோம் என்று பேசி உள்ளார். இந்த ஆட்சியை பொருத்தவரை சட்டமன்றத்தில் ஒரு பேச்சும் அவர்கள் நடந்து கொள்வது ஒரு விதமாகவும் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. 


இலக்கியம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் ஏழை மக்கள். அவர்களால் நகராட்சியின் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்த முடியாது. மேலும் இந்த கிராமத்தில் பெரும்பாலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பியுள்ளனர். ஆனால் இலக்கியம்பட்டி ஊராட்சியில் 1.1% பேர் மட்டுமே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ளதாக பொய்யான தகவலை கூறி இந்த பஞ்சாயத்தை நகராட்சியோடு இணைத்துள்ளனர். 


பெரும்பாலும் குடியிருக்க வீடு கூட இல்லாத நிலையில் மக்கள் உள்ளனர். அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் தொகுப்பு வீட்டை நாங்கள் பெற்றுத் தருவோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் நாங்கள் எந்த அளவுக்கும் போராட தயாராக உள்ளோம் என்று பேட்டியளித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad