தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் மற்றும் ஊரகப்பகுதியில் உள்ள 73 உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- சென்ற ஆண்டு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் இந்த ஆண்டு மாணவர்களுக்கு உரிய சிறப்பு பயிற்சிகள் வழங்கி, மாதிரி வினாத்தாள் தயாரித்து, தேர்வு வைத்து, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பள்ளிகளில் எட்டாம் வகுப்பிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத்தேர்வு, ஒன்பதாம் வகுப்பிற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு, பத்தாம் வகுப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு, 11ம் வகுப்பிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு ஆகிய தேர்வுகளில் பள்ளிக் கல்வித் துறை மூலம் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக மாநில அளவில் தருமபுரி மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
அதேபோல் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் மாவட்டத்தின் தொலைத்தூரங்களில் உள்ள பள்ளியின் மாணவர்களும் திறனாய்வு தேர்வுகளில் வெற்றி பெற்ற அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான எட்டாம் வகுப்புக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத் தேர்வு 22.02.2025 அன்றும், ஒன்பதாம் வகுப்பிற்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு 01.02.2025 அன்றும், பத்தாம் வகுப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 25.01.2025 அன்றும் நடைபெற உள்ளது. எனவே அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட பழங்குடியின நல அலுவலர் திரு.கண்ணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் திருமதி.எம்.மஞ்சுளா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.அ.ஜெயபிரகாசம் மற்றும் காணொலிவாயிலாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக