ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் வாகனம் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாரின் கட்டளைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்பு விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்மூலம், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததன் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட சிஆர்பிஎப் ஜவான்ஸ் குரூப் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது, அங்கு வீர மரணம் அடைந்த வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிஆர்பிஎப்-ஐ சேர்ந்த முன்னாள் உதவி ஆய்வாளர் எம்.தியாகராஜன், முன்னாள் தலைமை காவலர்கள் சி.வேலு, மாதேஷ், காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கலை செல்வம், பேரூராட்சி கவுன்சிலர் கமலேசன், சமூக நீதிப் பாதுகாப்பு கவுன்சில் சகாதேவன் மற்றும் மாதேஸ்வரி முத்தம்மாள் பவுனேசன் சக்திவேல் ஜெயவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக