தருமபுரி மாவட்டம் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் செயல்பாடுகளை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஷ்,இ.ஆ.ப., அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் செயல்பாடுகளை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஷ்,இ.ஆ.ப., அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களும் இன்று (08.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஒகேனக்கல் காவிரிக் கரையில் உள்ள நீரேற்று நிலையம், யானைப் பள்ளத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், மடம் பகுதியில் உள்ள 240 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 249 ஊராட்சிகளிலுள்ள 2,784 ஊரகக் குடியிருப்புகளுக்கும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி 6 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலுள்ள 3,974 ஊரகக் குடியிருப்புகளுக்கும், ஆகமொத்தம் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 6,758 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இவ்விரு மாவட்டங்களின் 2021-ம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 34.75 இலட்சம் நபர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 127.60 மில்லியன் லிட்டர் குடிநீரும், அதன் பின்னர் 2036-ம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 40.41 இலட்சம் நபர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 160.00 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு மேற்புறம் காவிரி ஆற்றில், இத்திட்டத்திற்கென நாளொன்றுக்கு தேவையான குடிநீர் எடுக்கப்பட்டு, 6.15 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள 160 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முழு அளவில் சுத்திகரிக்கப்பட்டு, 1.567 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையத்திற்கு நீரேற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து 3.422 கி.மீ தொலைவில் மடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 240 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.
பின்னர் மடம் பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள அனைத்து நகர மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு, 10,169 கிமீ நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ள 1500 மி.மீ. முதல் 63 மி.மீ. வரை விட்டமுடைய குழாய்களின் வழியாக தன்னோட்டம் மற்றும் நீரேற்றம் மூலமாக ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 530 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பயனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் ரூ.1928.80 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி (ரூ.1585.60 கோடி), மாநில அரசின் குறைந்த பட்சத் தேவைத் திட்டம் (ரூ.307.48 கோடி) மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்குத் தொகை (ரூ.35.72 கோடி) ஆகியவற்றுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் திரு பாலசுப்பிரமணி, திரு .சேகர், நிர்வாகப் பொறியாளர் திரு. ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள், திரு சுந்தரபாண்டியன். திரு நவீன் குமார் திரு.கோவிந்தப்பன், திரு பிரகாசம், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. சுருளிநாதன், திருமதி.சகிலா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக