தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் 03.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளதை தொடர்ந்து, இதுசார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தேர்வு கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.02.2025) நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்றது. இதனைமுன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தேர்வு கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் 103 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி (ADW School), 3 உண்டி, உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் (GTR Schools), 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி மற்றும் 65 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 177 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை 9,365 மாணவர்களும், 9971 மாணவியர்களும் என மொத்தம் 19,336 மாணவ, மாணவியர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வை 9,380 மாணவர்களும், 9,855 மாணவியர்களும் என மொத்தம் 19,236 மாணவ, மாணவியர்களும், 10-ஆம் வகுப்பு தேர்வை 10,426 மாணவர்களும், 9,610 மாணவியர்களும் என மொத்தம் 20,036 மாணவ, மாணவியர்களும் அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
மேல்நிலைப்பள்ளிகளில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு 83 தேர்வு மையங்களிலும், 10-ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வு 94 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. மேலும் மேல்நிலைப்பள்ளிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முன்னேற்பாட்டு பணிகள் தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுதேர்வுகளுக்கு அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 3500 பேர் தேர்வுப்பணிக்காக நியமனம் செய்யப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் மூலம் தேர்வுப்பணிக்கான ஆணை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாட்கள் வைக்கப்படவுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதமேந்திய காவலர்கள் வினாத்தாள் பெறப்பட்ட நாள் முதல் தேர்வுகள் முடியும் வரை பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 24 வழித்தடங்களில் மேல்நிலை பொதுத்தேர்வுக்கும் 24 வழித்தடங்களில் இடைநிலை பொதுத் தேர்வுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் எடுத்துச் செல்லப்படவுள்ள அனைத்து வழித்தடங்களுக்கும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மேலும், பொதுத்தேர்வு மைங்களில் உரிய பாதுகாப்பு பணிக்கு காவலர்களும், விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடியும் வரை 24 மணி நேரமும் ஆயுதமேந்திய காவலர் நியமனம் செய்யப்படவுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையம், தேர்வு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு தடையில்லா மின்சாரம் கிடைத்திட உறுதி செய்தல், கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து தேர்வு மையங்களை பார்வையிட்டு உறுதி செய்தல், தேர்வுகள் நடைபெறும் நாளன்று தேர்வு மையங்களில் பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தல், தேர்வு மையங்களை ஆய்வு செய்தல் மற்றும் பறக்கும் படை அமைத்து தேர்வுகள் புகாருக்கு இடமின்றி நடைபெறுவதை உறுதி செய்தல், தேர்வுமையங்களுக்கு குடிநீர் வசதி / வளாகத்தூய்மை பராமரித்தல் உள்ளிட்ட தேவையான வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக