காரிமங்கலம் நெடுஞ்சாலை உள்ள தாபா ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

காரிமங்கலம் நெடுஞ்சாலை உள்ள தாபா ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலை (ஹைவே) உணவகங்கள் மற்றும் தாபாக்களில் உணவு, இறைச்சிகள் தரம் மற்றும் சுகாதாரம்  குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதன் பேரில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் ஆலோசனை, மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்,  முதல் நிலை காவலர் ஆனந்த் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட தர்மபுரி கிருஷ்ணகிரி ஹைவே, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கரகோடள்ளி, கும்பாரள்ளி,மொரப்பூர் ரோடு, அகரம் பிரிவு நான்கு ரோடு, ஈபி ஆபீஸ் அருகில், பெரிய மிட்டள்ளி  செல்லும் சாலையில் உள்ள உணவகங்கள், தாபாக்களில் சுற்றுப்புற சுகாதாரம், பணியாளர்கள் தன் சுத்தம் மற்றும் உணவுப் பொருள்கள் தரம், இறைச்சிகள் தரம், உபயோகம் தடை செய்யப்பட்ட  நெகிழிகள்,சில்வர் பேப்பர், கவரில் உணவு மற்றும் சூடான சாம்பார், ரசம்  பார்சல் செய்யப்படுகிறதா, செயற்கை நிறமூட்டிகள் தவிர்க்கப்படுகின்றனவாஎன கண்காணித்து ஆய்வு செய்து உரிய விழிப்புணர்வு செய்தனர். 


ஆய்வில் பெரிய மிட்டள்ளியில் ஒரு தாபா, மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் ஒரு தாபா மற்றும் கரகோடள்ளியில் ஒரு தாபா என மூன்று இடங்களில் இருந்து குளிர் பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி மற்றும் நாள்பட்ட தகுதியற்ற கெட்டி தன்மை உள்ளபச்சை இறைச்சி (கோழி இறைச்சி) உள்ளிட்டவை சுமார் 5 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி கிருமி நாசினி தெளித்து அழிக்கப்பட்டது. ஒரு உணவகத்தில் பலமுறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயும் அப்புறப்படுத்தப்பட்டது . மேற்படி மூன்று தாபா உணவகங்கள் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய்.1000 என 3000 உடனடி அபராதம் நியமன அலுவலர் உத்தரவுப்படி விதிக்கப்பட்டது. 


மேலும் மொரப்பூர் செல்லும் சாலையில் ஒரு தாபாவில் குடிநீர் கேன்கள் உரிய விபரங்கள் அச்சடிக்கபடாமல், பழுதடையும் நிலையில் இருந்த குடிநீர் கேன்கள் கண்டு அப்புறப்படுத்தி மேற்படி தாபா உணவக உரிமையாளருக்கு ரூபாய்.1000 அபராதம் விதிக்கப்பட்டு குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், குடிநீர் கேன்கள் மற்றும் பொட்டலம் இடப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.இதே போல் தர்மபுரி சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரில் ஒரு தாபாவில் முறையாக சுகாதாரம் பேணப்படாத ஒரு  தாபாவிற்கு மேம்பாட்டு அறிவிக்கை நோட்டீஸ் வழங்கி உடனடி அபராதம் ஆயிரம் ரூபாய் விதித்து மூன்று தினங்களுக்குள் குறைபாடுகள் கலைந்து உரிய பதில் அறிக்கை சமர்ப்பிக்க எச்சரிக்கை செய்யப்பட்டது‌. 


ஒரு சில தாபா உணவகங்களில்  செயற்கை நிற மூட்டி பவுடர்கள், நெகிழி கவர்கள், நெகிழி டம்ளர் மற்றும் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் அப்புறப்படுத்தி தவிர்க்க விழிப்புணர்வு செய்யப்பட்டது.  20 க்கும் மேற்பட்ட தாபா மற்றும் உணவகங்கள் ஆய்வில் அனைத்து தாபாக்கள், உணவகங்களுக்கும் செயற்கை நிற மூட்டிகள் தவிர்க்கவும் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் அறவே தவிர்க்கவும், சூடான சாம்பார், ரசம் மற்றும் உணவு பொருட்கள் நெகிழிகள், சில்வர் பேப்பர்களில் பார்சல்  தவிர்க்க விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ(RUCO) டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக்கொள்ள வழிவகை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.


அனைத்து தாபாக்கள், உணவகங்களுக்கும் விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

Post Top Ad