சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.02.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து சீரிய நிர்வாகம் வழங்குவதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


முதல் 2 கட்டங்களாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, தற்போது 3-ஆம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய அரசின் சேவைகள் மற்றும் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும்.


கோடை காலங்களில் நகராட்சி, பேரூராட்சி, 251 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அந்தந்த பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைப்பதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.


மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும். வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக வேகத்தில் வாகனத்தை வாகனங்களை இயக்காமல் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதமான வேகத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.


பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய சாலைவிதிகளை பின்பற்றும் போது, எதிர்பாராத விதமாக ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க முடியும். போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவதோடு, விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள். 


இதனைதொடர்ந்து, போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012) மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டாய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், குழந்தைகளுக்கு எதிரான, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடைபெறா வண்ணம், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், இதுகுறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.


பின்னர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம்-மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு கண்காணிப்புக் குழுக்கூட்டம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் பொதுஇடங்களில் நிரந்தமாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி அகற்றுதல் குறித்தும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேசன் நிறுவனம் பாரத்நெட்-2 திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்தும் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, மாவட்ட வன அலுவலர் திரு.இராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திருமதி.பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad