தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சோகத்தூர், தொன் போஸ்கோ கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (15.02.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் பேசும்போது, தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றது. படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, பல்வேறு தனியார்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிட ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அரசு துறையின் மூலம் வெளியிடப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இளைஞர்களுக்கு முறையான வகுப்புகளும் இலவசமாக நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 07.05.2021 முதல் 14.02.2025 வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் சார்பாக பல்வேறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2,33,758 வேலைநாடுநர்கள் பணிவாய்ப்பு பெற்றனர். கடந்த வருடம் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு துறையால் நடத்தப்பட்டது. இதில், தருமபுரி மாவட்டத்தில், மூன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் ஆயிரத்திறக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தின், அதகபாடி பகுதியில், 1,733 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா (SIPCOT) அமைய உள்ளது. பல முன்னணி நிறுவனங்களான OLA, ATHER ENERGY, TVS, TITAN, e-MAN AUTOMOTIVES ஆகியவை இங்கு ஆலை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால், இம்மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. இன்றைய தினம் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்ட படித்த மற்றும் படிக்காதவர்களும் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகள் உட்பட 2545 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். பெங்களுர், சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களை சார்ந்த 152 முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும், 449 நபர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் (STUDY CIRCLE) 1000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து, போட்டித்தேர்விற்கான பயிற்சி பெற்று பயின்று வருகின்றனர். சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொது அறிவு மற்றும் போட்டித்தேர்வுகள் தொடர்பாக புத்தகங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கென உள்ளன. மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இப்பயிற்சி மையத்தில் பயின்று பல்வேறு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் நூலக வசதி, இலவச இணைய வசதியும் (Free Internet) ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதன்மூலம், வேலைவாய்ப்பிற்காக போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று, தங்கள் அறிவையும், திறனையும் வளர்த்துக் கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, மாவட்ட திறன் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு திறன் பயிற்சிகள் பெற்றவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.ம.தீபா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்னா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.உ.முரளிதரன் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியின் செயலாளர் அருட்திரு.ராபர்ட் ரமேஷ் பாபு, உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக