தருமபுரி மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் மற்றும் தாபாக்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டிருந்தார்.
அதன் படி, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உணவு பாதுகாப்பு ஒன்றிய அலுவலர் நந்தகோபால், காரிமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கெரகோடள்ளி, தும்பலஅள்ளி, மொரப்பூர் ரோடு, அகரம் பிரிவு சாலை, ஈபி ஆபீஸ் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பெரியாம்பட்டியில் உள்ள ஒரு துரித உணவு கடையில் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காரிமங்கலம் புறவழிச் சாலையில் உள்ள ஒரு தாபா மற்றும் பாலக்கோடு செல்லும் சாலையில் ரம்யா தியேட்டர் அருகே உள்ள ஒரு உணவகத்தில் இதே நிலை காணப்பட்டதால், இரண்டு கடைகளுக்கும் தலா ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
உணவக உரிமையாளர்களுக்கு, பிளாஸ்டிக் பேப்பர் பதிலாக வாழை இலை, மந்தார இலை, பாக்கு மட்டைகள் போன்ற சுற்றுச்சூழல் நண்பான பொருட்களைப் பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், மொத்தம் ₹3,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேசமயம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து உணவக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக