தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்ட அரசாணை பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் முறையான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விரிவானதிட்டம் 01.05.2025 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இத்திட்டத்தின்படி, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் அதிகபட்சம் 25 கி.மீ ஆகும். அதில் சேவை செய்யப்படாத பாதையின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் குறைந்தபட்சம் 65 விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். வழித்தடத்தின் தொடக்கபுள்ளி மற்றும் முனையப்புள்ளி சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ கிராமமாகவோ இருக்க வேண்டும். அதில் ஒன்று பேருந்து நிறுத்தமாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ இருக்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் இந்த மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024ன்- கீழ் இதுவரை 38 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோரிடமிருந்து புதிய வழித்தடத்திற்கு தற்போது 15.03.2025 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் மினிப்பேருந்திற்கான புதிய விரிவான திட்டம்-2024 நிபந்தனைகளுக்குட்பட்டு புதியதாக வழித்தடங்கள் கண்டறியப்பட்டால் உரிய வழித்தட வரைப்படங்களுடன் விண்ணப்பங்களை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோர் செயலர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, தருமபுரி அவர்களிடம் உரிய கட்டணம் செலுத்தி 15.03.2025-க்குள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக