தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அமைந்துள்ள இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஊரக திறனாய்வு தேர்வில் (NMMS) 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சிறப்புப் பெறுவதாக அறியப்படுகிறது. கல்வியை பொருளாதார தடைகள் இல்லாமல் தொடர மாணவர்களுக்கு ஊக்கமளிக்க அரசால் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாதம் ரூ.1,000 உதவித் தொகையை நான்கு ஆண்டுகள் வரை பெறுவர்.
இந்தத் தேர்வு, நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடைபெறும் ஒரு முக்கியமான போட்டித் தேர்வாகும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.48,000 வரை கல்வி உதவித் தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இந்த ஆண்டு தேர்வு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இத்தேர்வில், இராமகொண்டஅள்ளி அரசு பள்ளியைச் சேர்ந்த தரணி ஸ்ரீ (மதிப்பெண் 109), அக்ஷயா (106), தர்ஷிகா ஸ்ரீ (99), மற்றும் சபரி வாசன் (97) ஆகிய நான்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் சாதனை மாணவர்கள் மட்டுமின்றி பள்ளியையும் பெருமைப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன், உதவி தலைமையாசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் மாரா கவுண்டர், பெருமாள் கோவிந்தராஜ், கர்ணன், சுரேஷ், பிரபாகரன், இளமதி, சிவகாமி, கனிமொழி வசந்தி, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
பள்ளியின் இந்த சாதனைக்குக் காரணமாக இருந்த மாணவர்களின் உழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டலும், பெற்றோர் அளித்த ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வெற்றிகள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான நம்பிக்கையையும் உறுதியையும் ஏற்படுத்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக