மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் திட்டம்: தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் திட்டம்: தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஓமல்நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.04.2025) ஆய்வு செய்தார்.


தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, எண்ணும் எழுத்தும், திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்ய மாநில அளவில் திட்டமிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 91 பள்ளிகளில், மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் முன்னிலையில், தமிழ் மற்றும் ஆங்கில வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதத்தில் அடிப்படைத் திறன்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.


மாணவர்களின் வாசித்தல் மற்றும் கணித அடிப்படை திறன்களை மேம்படுத்துவதற்காக, 100 நாட்களில் கற்றல் முடிப்பதற்கான ஓப்பன் சேலஞ்ச் (Open Challenge) திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆய்வில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களை பள்ளி மாணவர்கள் மிகச்சிறப்பாக கற்றிருந்தனர்.


மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் தன்னலமின்றி பாடுபட வேண்டும் என்பதையும், குறிப்பாக ஆங்கில பாடங்களை தமிழில் எடுத்துரைப்பதன் மூலம், மாணவர்கள் படிப்பின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். மேலும், சிறப்பாக கற்றல் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டி, பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


இந்த நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) திருமதி லே. தென்றல், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ச. இளங்குமரன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad