தருமபுரி நகரத்தில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தரம் குறித்து திடீர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தருமபுரி நகரத்தில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தரம் குறித்து திடீர் ஆய்வு.


தருமபுரி நகராட்சிப் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ஏ.பானுசுஜாதா அவர்கள் இன்று (04.04.2025) திடீர் ஆய்வு நடத்தினார்.


மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி, தருமபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, பெரும்பாலான கடைகளில் பிராண்ட் மற்றும் லோக்கல் வகை குளிர்பானங்கள் உரிய விவரங்களுடன் அச்சடிக்கப்பட்டிருந்தன. ஆயினும், ஒரு கடையில் குறுகிய காலாவதியுடைய குளிர்பானங்கள் விற்பனைக்குக் கிடைத்ததைப் பார்த்து, அதனை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டது. காலாவதி தேதி முடிவுக்கு இரண்டு தினங்கள் உள்ள நிலையில், குளிர்பானங்கள் வாங்கப்பட்டு சில்லறை விற்பனைக்குச் சென்றால் விற்பனை ஆகாமல் காலாவதியாகி, அதனை அருந்தினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், கடை உரிமையாளருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


மேலும், அப்துல் முஜீப் தெருவில் உள்ள இரண்டு மொத்த விற்பனை நிலையங்களில் உரிய விவரங்கள் அச்சிடப்படாத, சிறிய பிளாஸ்டிக் ட்யூபுகளில் பலவிதமான நிறங்களில் உள்ள லோக்கல் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தயாரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. தயாரிப்பு முறையில் சரிவர கடைபிடிக்கப்படாத காரணத்தால், அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.


தற்போது, இவ்வகை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய கூடாது என்றும், அதற்கான நெறிமுறைகளைப் பின்பற்றி தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெறும். சந்தேகத்திற்கிடமான குளிர்பானங்கள் தொடர்பாக உணவு மாதிரிகள் எடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.


ஆய்வின் போது, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி, சரண்குமார், அருண் மற்றும் திருப்பதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad