மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் இதுவரை அரசு மற்றும் பட்டா நிலங்களில் உள்ளக் கனிமங்களுக்கு குத்தகை உரிமம் பெற வேண்டி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தபால் மூலமாகவோ நேரடியாகவோ விண்ணப்பிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
அரசு நிலங்களில் உள்ள கனிமங்களை இணைய வழியில் ஏலம்விடும் முறை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2025-26-ஆம் நிதியாண்டின் கொள்கையில் அறிவித்தபடி ஏப்ரல், 21-முதல் அரசால் பழைய நடைமுறை கைவிடப்பட்டு கிரானைட், சாதாரண கற்கள், சரளை கற்கள் உள்ளிட்டக் கனிமங்களுக்கான சிறு கனிமக் குத்தகை உரிம விண்ணப்பங்கள் முழுவதுமாக இணைய வழியில் மட்டுமே பெறப்படும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
ஆகவே 21.04.2025-இல் இருந்து குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணையதளமான https://mimas.tn.gov.in மூலமே விண்ணப்பிக்க இயலும். மேலும் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு குவாரி குத்தகை உரிமங்கள் இணையவழியில் வழங்கப்படும். இதன்மூலம், குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வெளிப்படைத்தன்மையோடு விரைவாக பரிசீலிக்கப்பட்டு உரிமங்களை காலதாமதமின்றி பெற இம்முறை வழிவகுக்கும். எனவே இனிவரும் காலங்களில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக