தருமபுரி, ஏப்ரல் 23:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பல்வேறு துறைசார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த கள ஆய்வை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் நல்லம்பள்ளி வட்டார இயக்கத்தில் உள்ள ஓம் சக்தி மகளிர் குழுவின் மூலம் தேன் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள், விற்பனை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனும் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார்.
வள்ளலார் குழந்தைகள் இல்லம், ஒருங்கிணைந்த மறுவாழ்வு துணை சேவை மையம், மற்றும் வனவழிகள், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், குடிநீர் திட்டங்கள், எண்ணெய் மில், உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதையடுத்து, அதியமான் கோட்டையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, மக்கள் மனுக்களை பெற்றுக்கொண்டு, அரசு நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி பொதுமக்களை அடையச் செய்வதற்கான பணிகளை உறுதி செய்ய அறிவுறுத்தினார். பூமரத்தூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இக்காலத்துக்கேற்ப மக்களுக்கு நேரில் சென்று சேவைகளை வழங்கும் இந்த முயற்சி, மக்கள் நம்பிக்கையை பெற்றதுடன், பல்வேறு துறைசார்ந்த பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தும் வழிவகையாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி கே. சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, திட்ட இயக்குநர்கள், வட்டாட்சியர் திரு. சிவக்குமார், மற்றும் பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக