கடத்தூரில் குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு – தரமற்ற பொருட்கள் பறிமுதல், அபராதம் விதிப்பு! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

கடத்தூரில் குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு – தரமற்ற பொருட்கள் பறிமுதல், அபராதம் விதிப்பு!

தர்மபுரி, ஏப்ரல் 23:

தர்மபுரி மாவட்டத்தில் கோடைக் காலம் தீவிரமடைந்து வருவதையடுத்து, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் களத்தில் இறங்கி தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், ஐ.ஏ.எஸ்., அவர்களின் பரிந்துரை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி.பி.எஸ்., அவர்களின் மேற்பார்வையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. நந்தகோபால் மற்றும் மொரப்பூர் ஒன்றிய அலுவலர் திரு. திருப்பதி ஆகியோர் தலைமையில் குழுவினர், கடத்தூர் பகுதியில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், தர்மபுரி, அரூர், பொம்மிடி சாலைகளில் உள்ள குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களில் ஆய்வை மேற்கொண்டனர்.


அந்தந்த நிறுவனங்களில் உள்ள குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களில் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, பேட்ச் எண், சேர்க்கப்பட்ட உட்காரணிகள் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமை எண் உள்ளிட்ட விவரங்கள் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பரிசோதித்தனர். மேலும், விற்பனை நிலையங்களின் சுற்றுப்புற சுகாதாரம், உபகரணங்களின் தூய்மை நிலை, பராமரிப்பு முறைகள் உள்ளிட்டனவும் கண்காணிக்கப்பட்டது.


இந்த ஆய்வின் போது, பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் லேபிள் இல்லாத லோக்கல் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டதைக் கண்டறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். அதேபோல் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் காலாவதியான லெஹர் சோடா குளிர்பானங்கள் மற்றும் ஜங்க் ஃபுட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.


மேலும், 20 லிட்டர் குடிநீர் கேன்களில் தயாரிப்பு முகவரி மற்றும் தேதிகள் தெரியாமல் இருந்ததையடுத்து, இனிமேல் விற்பனைக்காக அனுப்பப்படும் அனைத்து கேன்களும் தெளிவாக நீர் தெரியும் வகையில், தேவையான விவரங்களுடன் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. மேற்படி தவறுகளுக்காக இரு விற்பனை நிலையங்களுக்கும் தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.


அதனுடன், பிராண்டட் மற்றும் லோக்கல் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கபட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேரடி வெயில் வெளிச்சத்தில் குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வைக்க வேண்டாம், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம் என விற்பனையாளர்களுக்காக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும், தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நியமன அலுவலர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad