பாலக்கோட்டில் பைனான்ஸ் தொழிலதிபரை கடத்த முயன்ற கும்பல் – 5 பேர் போலீசாரால் கைது!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

பாலக்கோட்டில் பைனான்ஸ் தொழிலதிபரை கடத்த முயன்ற கும்பல் – 5 பேர் போலீசாரால் கைது!.


பாலக்கோடு, ஏப்ரல் 24:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 54) என்பவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 20ஆம் தேதி அதிகாலை, வழக்கம்போல் நடைபயிற்சி செல்ல இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு புறப்பட்டார். அப்போது அவரது வீட்டு அருகே காத்திருந்த மர்ம நபர்கள், சொகுசு கார் மூலம் அவர் செல்லும் இருசக்கர வாகனத்தை மோதினர். பின்னர் தகராறு போல் நடித்து, எதிர்பாராதவிதமாக மயக்க ஸ்பிரே அடித்துள்ளனர். ஆனால் சக்திவேல் அதற்குள் சுதாரித்து கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்த அந்த மர்ம நபர்கள் காரில் ஏறி தப்பி ஓடியுள்ளனர்.


இது தொடர்பாக சக்திவேல் பாலக்கோடு போலீசில் புகார் செய்தார். உடனே SP மகேஸ்வரன், DSP மனோகரன் ஆகியோர் தலைமையில் சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், சுப்ரமணி, பார்த்திபன், சப் இன்ஸ்பெக்டர்கள் கோகுல், சீனிவாசன், ஆனந்தகுமார், சுந்தரமூர்த்தி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். CCTV காட்சிகள் மற்றும் செல்போன் தகவல்களை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு, 23ஆம் தேதி அதிகாலை அண்ணா நகர் பகுதியில் சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நிற்கும் தகவல் கிடைத்தது.


விரைந்து சென்று காரை சோதனை செய்தபோது, உள்ளே இருந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பிக்க முயன்ற போது கையை முறித்துக்கொண்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரின் விசாரணையில், முக்கிய குற்றவாளி நவீன்குமார் (38) கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையை அடுத்த உள்ள சி.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர் எனவும், அவருடன் இருந்தவர்கள் பெங்களூரை சேர்ந்த திருவெண்குமார் (25), உடுப்பியை சேர்ந்த பிரமித் சால்டானா (29), ஹீப்ளியை சேர்ந்த தேஜாஸ் (26), சித்தூரை சேர்ந்த நவீன் (24) எனவும் தெரிய வந்தது. 


இந்த ஐவரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்து கடத்தி பணம் பறிக்கும் கும்பலின் உறுப்பினர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பல்வேறு மாநிலங்களில் இவர்கள்மீது 50க்கும் மேற்பட்ட ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். சக்திவேலை கடந்த 20ஆம் தேதி கடத்த முயன்றதுடன், மறுபடியும் அவரை கடத்த முயன்றபோது போலீசிடம் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் துரித நடவடிக்கையால் ஒரு பெரிய குற்றம் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad