தருமபுரி விவசாயிகளுக்கு ஸ்பைஸ் திட்ட நிதி: திமுக MP ஆ.மணி கேள்வி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

தருமபுரி விவசாயிகளுக்கு ஸ்பைஸ் திட்ட நிதி: திமுக MP ஆ.மணி கேள்வி.

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டு ஏற்றுமதி மேம்பாட்டிற்கான ஸ்பைஸ் திட்டத்தின் (SPICE SCHEME) நிதி வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை திமுக மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி எம்.பி. அவர்கள் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் எழுப்பியுள்ளார்.


விவசாயத்தில் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கவும், ஏற்றுமதி திறனை மேம்படுத்தவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஸ்பைஸ் திட்டம், விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான (FPOகள்) உதவித்திட்டமாகும்.


தருமபுரி மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பெறும் நன்மைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் ஆ.மணி எம்.பி. அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை ஸ்பைஸ் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகள் எண்ணிக்கை, விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் எண்ணிக்கை, பொருட்களின் தரம், உற்பத்தித்திறன் மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான தகவல்களை கேட்டுள்ளார்.


மேலும், இந்த திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை மற்றும் அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்திய தகவல்களையும் கேள்வியில் அடக்கி வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.


இந்த கேள்விகள் குறித்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விரைவில் விளக்கம் அளிக்குமா என்று தருமபுரி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஸ்பைஸ் திட்டத்தின் மூலம் தருமபுரி விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும் முயற்சியாக இதனை விவசாயிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad