தருமபுரி அனசாகரத்தில் பங்குனி உத்திரம் உற்சவம்; விமர்சையாக நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தருமபுரி அனசாகரத்தில் பங்குனி உத்திரம் உற்சவம்; விமர்சையாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அனசாகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்கள் விமர்சையாக நடைபெற்றன.


பொதுவாக பங்குனி மாதத்தில் நடைபெறும் உத்திர நட்சத்திர நாளில், முருக பெருமானுக்கும், அவரது தேவிகளான வள்ளி மற்றும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் புனித நாளாக இது கருதப்படுகிறது. அந்த வகையில், அனசாகரத்தில் உள்ள இந்த திருக்கோவிலில், முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் அருள்பெறும் வகையில் சாமி சிறப்பு சன்னிதியில் வீற்றிருந்தார்.


விழாவுக்கு தொடக்கம் கொடியேற்றத்துடன் தரிசனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக, வழிபாடுகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடர்ந்து, விநாயகர் ரதம் மற்றும் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர் உற்சவம் ஆடம்பரமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.


பக்தர்களுக்காக சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று தருமபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலிலும் பங்குனி உத்திர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயத்தில் வைக்கப்பட்டது.


பிறகு காவடி ஊர்வலம், முருகர் வள்ளி தெய்வானை உற்சவர் திருவீதி உலா ஆகியன பக்தி பூர்வமாக நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் ஒத்துழைத்து சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad