2025 – 2026 ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கை அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

2025 – 2026 ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கை அறிவிப்பு.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2025 – 2026 ஆண்டிற்கான மாணவ / மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. இவை விளையாட்டுத் துறையில் சாதனை செய்ய விரும்பும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி முடித்தவர்களுக்கு அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு வசதிகளை வழங்குகின்றன.


விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 01.01.2025 அன்று 17 வயது நிறைவடைந்த, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்குத் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர்.


தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் மாநில அல்லது தேசிய அளவில் வெற்றி பெற்றவர்கள், தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


விண்ணப்பதாரர்கள் 21.03.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 06.04.2025 (மாலை 5.00 மணி) ஆகும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 08.04.2025 அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கும். ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை, எம்.ஆர்.கே. ஹாக்கி ஸ்டேடியம், எழும்பூர், சென்னை மற்றும் நேரு பார்க் விளையாட்டரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் நாளன்று காலை 7.00 மணிக்கு அனைவரும் அறிக்கை செய்திட வேண்டியது அவசியம்.


தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடைய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad